தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை, அதற்காக மத்திய அரசிடம் அவர்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஒமர் அப்துல்லா பேசியதாவது: சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து கிராம பாதுகாவலர்களுக்கு ஆயுதம் வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர்கள் நிர்வாக தோல்விக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய போது இனி காஷ்மீரில் துப்பாக்கி இருக்காது என்று தெரிவித்தனர். ஆனால் நாளுக்கு நாள் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை பார்க்கும்போது நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதையே உணர்த்துகிறது.
தேர்தல் என்பது காஷ்மீரிகளின் உரிமை. பாஜக காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைத்தால் அதை நாங்கள் வரவேற்போம். நடத்தவேண்டாம் என்று நினைத்தால் அவர்கள் நினைப்பது போல் செய்யட்டும். இதற்காக மத்திய அரசிடம் காஷ்மீரிகள் மன்றாட முடியாது. அவர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. ஒருவேளை தேர்தல் நடத்தினால் புதிய அரசு மக்களின் பிரச்னைகளை தீர்க்க முயற்சிக்கும் என்று பாஜக தலைமையிலான அரசுக்கு தெரியும். அதனால்தான் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.







