தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது – திருமாவளவன்

தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு அயன் ரெட்டியப்பட்டி கிராமத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசின் தாயார் புஷ்பம் ரத்தினசாமியின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு புஷ்பம் ரத்தினசாமியின் படத்தை திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

”திருப்பரங்குன்றத்தில் மத அடிப்படையிலான பிரச்சனையை முன்னிறுத்தி இந்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே மோதலை உருவாக்க சங்பரிவார அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.‌ இது கண்டித்து நாளை மதுரை பழங்காநத்தம் பகுதியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மதுரையை சனாதன அரசியலுக்கு மையமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.‌

மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டத்தை ஜி. ராம்ஜி என்ற வடமொழி பெயரால் அதன் அடையாளத்தை மாற்றி விட்டார்கள். காந்தியடிகளை சிறுமைப்படுத்துவது  பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் நோக்கமாக உள்ளது. இந்த போக்கை வன்மையாக கண்டித்து வரும் 24ஆம் தேதி திமுக தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

தற்போது இந்த எஸ்ஐஆரில் 27 லட்சம் பேர் இறந்தவர்கள் எனவும் மூன்று லட்சம் பேர் இரு முறை பதிவு செய்தவர்களாகவும் அறியப்பட்டுள்ளார்கள். இதில் எஞ்சியவர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என கூறுகிறார்கள். அந்நிய நாடுகளில் இருந்து ஊடுருவியர்களை கண்டுபிடிப்பதற்காகவே எஸ் ஐ ஆர் நடைமுறை கொண்டுவரப்பட்டதாக கூறினார்கள். இதில் எத்தனை பேர் அந்நிய நாடுகளில் இருந்து ஊடுருவி உள்ளார்கள் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

எஸ்ஐஆர் மூலம் திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜக அரசின் நோக்கம். ஆனால் அத்தகைய பின்னடைவை மக்கள் ஒருபோதும் வழங்க மாட்டார்கள்.

செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள். அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற குறைபாடு உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இதை கருத்தில் கொண்டு விரைந்து நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவெக தலைவர் விஜய் திமுக ஒரு தீய சக்தி என கூறியது அவர் சொந்தமாக சொல்லுவது போல தெரியவில்லை. அவரது உரை முழுவதும் திமுக வெறுப்பாக மட்டுமே உள்ளது” என்றார்.

தொடர்ந்து தவெக தலைவர் விஜயும் பெரியார் கொள்கையைத்தான் பின்பற்றுகிறோம் என கூறுகிறார் எதிர்காலத்தில் விஜயுடன் நீங்கள் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, புன்னகையுடன் கையெடுத்து கும்பிட்டபடியே ரியாக்சன் காட்டி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.