நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக மூத்த வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபுவும் கலந்துகொண்டார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
“சென்னையில் நான் மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. மேம்பாலங்களை மாநகராட்சி கட்டுவது கிடையாது. அது பொதுப்பணித்துறை மற்றும் மத்திய அரசின் வேலை. ஆனால் இந்த மேம்பாலங்களை, குறித்த காலத்திற்கு முன்பே கட்டிய பெருமை திமுகவையே சேரும். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக அந்த பணிகளை கிடப்பில் போட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து அந்த பாலங்கள் அனைத்தையும் கட்டி முடித்தது.
பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதுதான் திராவிடம். பெரிய மாளிகையில் அமர்ந்து கொண்டு பேசக்கூடியவர்களுக்கு, இங்கு நடப்பது ஒன்றும் தெரியாது.
இதையும் படியுங்கள் : சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சு
பிரதமரை, அமித்ஷவை நான் கேட்டுக்கொள்கிறேன். இங்குள்ள ஆளுநரை நாடாளுமன்ற தேர்தல் வரை மாற்ற வேண்டாம். அது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தரும். திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பிரச்சாரம் செய்கிறார். ஆளுநரால்தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது. தமிழ்நாடு மக்கள் ஆளுநரை பொருட்படுத்தவில்லை. பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.








