திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழகமும் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கேயம் வந்தார். அப்போது காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே உள்ள 52 அடி உயரமுள்ள கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் கட்சியனர் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த பகுதியில் நெசவு தொழில் அதிகம். ஆனால் இந்த தொழில் செய்பவர்கள் திமுக அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொப்பரை விலை அதிமுக ஆட்சியில் உயர்த்திக் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண்துறை சிறப்பாக இருந்தது. திமுக அரசு விவசாயிகளுக்கு 2 லட்சம் பம்ப் செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும், வராது என தெரியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். அந்தளவிற்கு மின் தடை உள்ளது.
இதையும் படியுங்கள் : ஆளுநரை மாற்ற வேண்டாம்…! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதேபோல் நெசவாளர்களுக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி, விசைத்தறி தொழில் புரிபவர்கள் நலிவடைந்து, தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள், விவசாயிகள் மகிச்சியாக இருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் அவர்கள் அழிந்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழகமும் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்த நிலை மாற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும். அதிமுக நிறுத்தும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.







