முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது, வழக்கினை காலம் தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி, வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது. தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை புரிந்த குற்றாவாளிகளைகூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துப்பறிய கடினமான அரிதான கொடுங்குற்ற வழக்குகளை மட்டும், விரைந்து விசாரணை நடைபெற வேண்டி குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றிய நிலைமாறி, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்கும் வகையில் உணர்வுப்பூர்வமான வழக்குகள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி கிடப்பில் போடுவதென்பது வழக்கமாகிவிட்டது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிவேண்டி மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியவுடன், போராட்ட எழுச்சியை மட்டுப்படுத்துவதற்காக வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. ஆனால் இன்றுவரை மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு கிடைத்த நீதியென்ன? வழக்கின் நிலையென்ன? விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? எதுவுமில்லை. அதைப்போலவே தற்போது வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினையும், கிடப்பில் போட்டு குற்றவாளிகளை தப்புவிக்க செய்யும் முயற்சியே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாகும்.

தங்களால் கண்டறிய முடியவில்லை என்று ஒப்புக்கொள்ளும் வகையில், காவல்துறை ஆணையரே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றுவதாக கூறுவது, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வரின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட அவமானமில்லையா? தலைகுனிவில்லையா? முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் திமுக அரசு அமைத்த சமூகநீதி கண்காணிப்பு குழு வேங்கைவயல் கிராமத்தில் செய்த விசாரணை என்ன? நடத்திய ஆய்வு என்ன? கொடுத்த அறிக்கை என்ன? அதன்பெயரில் எடுத்த நடவடிக்கை என்ன? இதுதான் 60 ஆண்டுகாலமாக திராவிடம் தமிழர் மண்ணில் கட்டிக்காத்த சமூகநீதியா?

ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்த சமூகவிரோதிகளைக்கூட கைது செய்ய முடியாத திறனற்ற திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு என்றுதான் இனி அழைக்க வேண்டும்.

ஆகவே, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை என்ற பெயரில் வேங்கைவயல் தீண்டாமைக்கொடுமை வழக்கினை தமிழக அரசு மேலும், மேலும் காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என்று சீமான் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தந்தையை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கை

Halley Karthik

சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Arivazhagan Chinnasamy

நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும்: சரத்குமார்

Niruban Chakkaaravarthi