திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!

திமுகவை குடும்ப கட்சி என விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பேசியுள்ளார்.

அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது ;

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதை கொம்பனாலும் தடுக்க முடியாது. அதிமுகவில் அடிமட்ட தொண்டன், சாதாரண கிளை செயலாளர்,  கூட முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக முடியும்.

திமுக குடும்ப கட்சி, அது கார்பரேட் கட்சி . கனிமொழி தான் தற்போது பாராளுமன்ற இரு அவைகளுக்கும் தலைவராக உள்ளார். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 1999 ஆம் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து, வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டும் அது மதவாத கட்சியா…?

அரசு ஊழியர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சண்முகம் தெரிவிக்கிறார். திமுக கூட்டணியில் புகைச்சல் கிளம்பியுள்ளது.  இந்த கூட்டணி நிலைக்குமா என மக்கள் மத்தியில் கருத்து உள்ளது. ஸ்டாலின் ஆட்சிக்கு சாவுமணி அடிக்கும் காலம் வந்து விட்டது

விவசாயிகளின் நெல்கள் நேரடி கொள்முதல் முறையாக செய்யவில்லை. சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு கொடுக்கவில்லை. நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் கொடுப்பதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கரும்பு டன் 4000 ரூபாய் கொடுப்பதாக கூறியதை நிறைவேற்ற வில்லை.

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி உள்ளார். பச்சை பொய், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். விஞ்ஞான உலகத்தில் உங்களது பொய் எடுபடாது மா.சுப்ரமணியன் அவர்களே…!

நேற்று திருத்தணியில் பட்டபகலில் ரயிலில் சென்ற இளைஞரை 4 பேர் கஞ்சா போதையில் வெட்டியுள்ளனர். தொடர்ந்து கஞ்சாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் தங்கம் விலை நிலவரம் போல, கொலை, கொள்ளை நிலவரம் வருகிறது. தேர்தலின்போது திமுக கொடுத்த 525 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வு ரத்து ரகசியம் உள்ளதாக கூறியவர்கள் ரத்து செய்தார்களா…?

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பயிருக்கு வேலி அமைப்பது போல நமக்கு பாதுகாப்பு காவல்துறை. காவல்துறைக்கு முழு நேர தலைவரை நியமனம் செய்ய முடியவில்லை. பொறுப்பு டிஜிபிக்கு உடல் நிலை சரியில்லாததால் மற்றொரு பொறுப்பு டிஜிபி நியமிக்கபடுகிறார். திமுக ஆட்சியில் 67% மின்கட்டணம் உயர்ந்துள்ளது. வீட்டு வரி, தொழில் வரி என அனைத்தையும் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளார்கள். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திற்கும் மருத்துவ கல்லூரி கொண்டுவரப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.