“திமுக அரசு “மா” விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மா” விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, “மா” விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரியது அதிமுக.

ஆனால், வழக்கம் போல இங்குள்ள திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? இல்லை. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு? இவர்களிடம் விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்நிலையில், கர்நாடக மாநில மா விவசாயிகளுக்கு PDPS திட்டத்தின்படி இழப்பீட்டினை மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நலன் காக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்பதுடன், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் “மா” பயிர்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும். அஇஅதிமுக என்றும் விவசாயப் பெருங்குடி மக்களுடன் துணை நிற்கும், அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.