திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தே.ஜ.கூ தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திமுகவின் மாநில மாநாடு இரண்டு நாட்களுக்கு முன்பு இதே திருச்சியில் நடந்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார். அதிமுக அற்புதமான கூட்டணியை தமிழகத்தில் அமைத்திருக்கிறது.
திமுக – காங்கிரஸ் கூட்டணியானது பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. திமுக காங்கிரசிடம் கெஞ்சி, அடிமையாகி கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் பரஸ்பர உணர்வோடு இணைந்திருக்கிறோம். எத்தனை முறை எங்கு கூட்டம் போட்டாலும் திமுக அரசை மக்கள் நம்ப மாட்டார்கள்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நடக்கப் போவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்; ஆனால் ஸ்டாலின் இதை மறந்து விட்டு டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே போட்டி என்று பேசி வருகிறார்.
திமுக கூட்டணியில் அனைவருக்கும் ஒரே கொள்கை என்கிறார் ஸ்டாலின். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரே கொள்கையா? திமுக கொள்கையும். கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் தனித்தனி கட்சிகள் எதற்கு? திமுக அரசை அகற்றுவதுதான் எங்களுடைய கூட்டணியின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.







