வைபவ் சூர்யவன்ஷி: தம்புள்ளை நிகழ்வு குறித்து பிசிசிஐ கூறுவதென்ன…?

இலங்கை வீரருடானான வைபவ் சூர்யவன்ஷியின் சண்டை குறித்து பிசிசிஐ முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கான்ஸ்தான் ஆகிய நாடுகளின் ‘ஏ’ அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை ஏ – இந்தியா ஏ அணிகள் மோதின. இப்போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் நடைபெற்றது. சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி நிர்ணயித்த 17 ரன்கள் என்கிற இலக்கை எட்டமுடியாமல் இந்தியா ஏ அணி தோல்வியுற்றது.

போட்டியின் இலங்கை அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, இலங்கை ஏ அணி வீரர் விஷின் ஹலம்பட்ஜ் களத்தில் இருந்த வைபவ் சூர்ய வன்ஷியை ஏதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சூர்ய வன்ஷி அவருடன் சண்டைக்கு சென்றார். சக இந்திய வீரர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் இலங்கை வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

ஐசிசி விதிகளின் படி போட்டியின் போது கைகலப்பில் ஈடுபடுவது விதிமீறல் ஆகும். இதனால் சூர்யவன்ஷி மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா “இந்தியா ‘ஏ’ அணி ஒரு பெரிய தொடரில் விளையாடுகிறது. இந்திய மூத்த அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள வளர்ந்து வரும் வீரர்கள் மற்ற விஷயங்களால் கவனம் சிதறாமல், தங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.