தமிழ் நாட்டின் நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அப்போது மாநிலத்தின் மொத்த கடன் 13.18 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் முந்தைய திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றசாட்டுகளையும் முன் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் திருச்சுளி எம்.எல்.ஏ-வுமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது.
ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல!
எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.




