தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள்!

தைப்பூசத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி…

தைப்பூசத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தைப்பூசம் நாளை (ஜன.25) நடைபெறுகிறது.   இதனை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,
தென்காசி, விருதுநகர், மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பக்தர்கள் 3 அடி முதல் 22 அடி வரையிலான அழகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு  நாளை அதிகாலை 1 மணியளவில் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது.  இதனைத் தொடர்ந்து 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 5 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும்.

இதையும் படியுங்கள்: மெலடியோ, அதிரடியோ இசையில் மிரட்டும் டி.இமான் – பிறந்தநாள் தொகுப்பு.!

பின்னர் வழக்கம் போல் மற்ற  பூஜைகள் நடைபெறுகிறது.  பக்தர்களின் வசதிக்காக நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  மேலும் திருநெல்வேலி சாலையில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.  தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோயில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரத வீதி வரை சர்வீஸ் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் பகுதி முழுவதும் திருவிழாக்கோலம் போன்று காட்சியளிக்கிறது. இந்தநிலையில் போதிய அளவில் காவல்துறையினர் இல்லாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  எனவே பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு பணியில் கூடுதலாக காவல்துறையினரை ஈடுபடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.