உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில் மதுரை…

உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா இன்று மதுரையில் நடைபெறுகிறது. 62 கோடியே 78 இலட்ச ரூபாய் மதிப்பில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது

இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் போற்றும் வகையில் ஏறுதழுவுதல் விழா நடைபெறும்

தமிழர்களின் பெருமைக்குரிய தொழிலாக பழங்காலத்திலிருந்து திகழ்ந்து வருவது உழவுத் தொழில்.  “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். அத்தகைய உழவுத் தொழிலுக்கு முதன்முதலில் தேவைப்பட்டது “காளை”. அந்நாளில் காடுகளில் திரிந்த காளைகளைப் பிடித்து அடக்கிப் பழக்கி உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர் தமிழ் மக்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான், மாடு பிடிக்கும் விழா, “ஏறு தழுவுதல்”, “எருது விடுதல்” “மஞ்சு விரட்டு”, ஜல்லிக்கட்டு” எனப் பல பெயர்களில் தமிழ்ச் சமுதாயத்தில் வழிவழியாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு 18.3.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பையோட்டி அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. முதல் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.  முதலிடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு தார் ஜீப் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெரும் ஓவ்வொரு ஜல்லிக்கட்டு காளை மற்றும் வீரருக்கு தங்ககாசு, வெள்ளிகாசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏறு தழுவுதல் அரங்கத்தை திறந்து வைக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.