“ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார்” – பரமக்குடியில் ஜே.பி.நட்டா பரப்புரை!

ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி பரப்புரையில் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு…

ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பரமக்குடியில் இன்று (ஏப். 16) ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பரமக்குடியில் நடைபெற்ற ரோடுஷோ

அவருடன் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி எம்பி ரவீந்திரநாத்தும் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். கையில் பலாப்பழம் சின்னம் பொறித்த பதாகையை கையில் ஏந்தியபடி ஜெ.பி.நட்டா திறந்த வாகனத்தில் நின்று கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

இந்த பேரணியின் போது ஜே.பி.நட்டா பேசியதாவது,

“ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாற்ற வேண்டும். அதை அடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும். பிரதமர் மோடியின் எழுச்சிமிகு தலைமையின் கீழ், கிராமப்புறங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்” என்றார்.

பரமக்குடியில் நடைபெற்ற சாலை பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரப்புரை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவருடன் மேலும் 5 பன்னீர்செல்வம்கள் சுயேட்சைகளாக களத்தில் உள்ளனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.