மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு பிரிந்த நவம்பர் 1ஆம் தேதியை அரசு கொண்டாட முன்வர வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ராஜ்கிரன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்யக்கூடிய சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது .இதற்கு பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் மாநிலம் பிரிந்த நாள். இந்த ஆண்டு முதல் தமிழக அரசு அதை கொண்டாட வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும். நவம்பர் முதல் நாளை தமிழர் இறையாண்மை நாள் என அறிவிக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.








