கட்டுரைகள் செய்திகள் வேலைவாய்ப்பு வணிகம்

சொட்டு நீர் பாசனத்தில் கலக்கும் எம்.பி.ஏ பட்டதாரி


நிருபன் சக்கரவர்த்தி

கட்டுரையாளர்

உயர்பதவி, விலையுயர்ந்த கார், கைநிறைய பணம், ஆடம்பர வாழ்க்கை அனைத்தையும் உதறிவிட்டு இயற்கை விவசாயத்தை கையிலெடுத்த இளைஞர்.

நிற்க.. அந்த சீன்தான் இங்க இல்லை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கிராமத்தில் கிருஷ்ணகுமார். எம்.பி.ஏ (HR) படிப்பினை முடித்து தான்பணிபுரிந்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

ஏன் என்று கேட்கும்போது மேலே கூறிய சல்லியடிக்கும் காரணங்களையெல்லாம் கூறவில்லை. அவர் கூறிய காரணங்கள் சற்று வித்தியாசமாகவும், எதார்த்தமாகவும் இருந்தது.

நான் படிச்சிருக்கேன், வேல பார்த்தேன் மதுரைக்குள்ளயே 15,000 சம்பளம் கொடுத்தாங்க. சொந்தமா நிலம் கிடக்குது. கொஞ்சம் விவசாயம் பண்ணி பார்ப்போம். அந்த 15,000 வந்தாலே போதும். அப்படி வராட்டி திரும்ப வேலைக்கு போயிறலாம்னு நினைச்சுதான் கரிசமண்ணுக்குள்ள காலெடுத்து வச்சேன்.

இன்னொரு இடத்துல போய் வேலை பார்த்துட்டு ரத்தம் சுண்டுன பிறகு நம்மள வெளி அனுப்பிருவாங்க, அப்போ எதாச்சும் தொழில் பண்ணிதானே ஆகணும்ல அதை இப்போவே பண்ணிருவோம். அதுபோக எங்கப்பனுக்கு வேற உடம்பு சரியில்லாம போச்சு, எங்க ஆத்தா சின்ன வயசுலயே இறந்து போயிருச்சு. அந்த மனுசனும் வேற கல்யாணம் முடிக்காம எங்க அண்ணன், என்னையும் வளர்க்கிறதுலயே காலத்த ஓட்டிட்டாரு. சரி அந்த மனுசன் கூட இருந்து பார்த்துக்கிற மாதிரியாச்சும் இருக்கும்லனுதான் விவசாயத்தை கையில எடுத்தேன். பெருசா லட்சியமோ, புரட்சியோ அது மாதிரி எதுவும் கிடையாது.

நமக்கு சொந்தமா நிலம் இருக்கிறதால பெரிய பிரச்சன இல்ல, இல்லாட்டி நிலம் யார்கிட்டயாச்சும் குத்தைக்கு வாங்கணும். பெருசா விளைச்சல் இல்லாட்டியும் குத்தகை பணம் கொடுக்கணும். மொத்த 4 1/2 ஏக்கரு இருக்கு, 1 ஏக்கருல மாமரம் வச்சிருக்கேன். பழையமுறை விவசாயத்த தான் பார்க்குறேன். சொட்டு நீர் பாசன முறை நல்லா கை கொடுக்குது.  கைசெலவுக்கு வரமாதிரி தேனி பெட்டி வளர்க்கிறது, நாட்டுக்கோழி வளர்த்து முட்டைகள சின்ன வியாபாரிகள் வந்தே வாங்கிட்டு போறாங்க. சொட்டுநீர் பாசனத்த திருமங்கலம் தோட்டக்கலை துறை ஆபிசர்கள் சொல்லி கொடுத்தாங்க. காய்கறி ஒரு 20 செண்ட்ல போட்டுக்கேன் காய்கறியை மொத்தமாக கொடுக்க மாட்டேன் லோக்கல்ல TVS XL வண்டியில போட்டு நானே வித்துட்டு வந்துருவேன். நித்தம் எல்லாரும் காய் வாய்வாங்க அதுபோக நாம தோட்டத்து காய்னால கூட கொஞ்சம்  இலவசமா கொடுப்போம். Fresh காய்னால நம்ம காய்க்கு கொஞ்சம் பவுசு அதிகம். ரொம்ப அலையணும்னு அவசியம் இல்லை மதியம் 12மணிக்குள்ள காய வித்துப்புடுவேன்.

மொத மொத 60 செண்ட்ல வெள்ளரிக்காய் போட்டேன். 70,000 செலவளிச்சேன். லாபம்னு பார்த்தீங்கனா 40,000 கையில நின்னுச்சு, அதே வெண்டக்காய் போட்டேன் விலை குறைஞ்சு போச்சு அப்போ கூலி குடுத்த காசு கூட வரல, வெங்காயமும் அதே மாதிரிதான் பெரிசா லாபம் வரல, ஆனா கத்திரிக்காய் ஒரு அளவுக்கு லாபம் வருது எப்பவுமே, தோட்டக்கலை துறைக்காரங்க கிட்ட நாம ஆலோசனை கேட்டாலே போதும் நல்லா லாபம் பார்த்திறலாம்  அப்பப்ப நெல்லு, தக்காளி, மிளகாய் போடுறேன். அனுபவம் இல்லாட்டியும் கொஞ்சம் கொஞ்சமா கால் வச்சா பெருசா நட்டமாகாது அசல எடுத்திடலாம். ரொம்ப போட்டோம்னா கூலி ஆள் கிடைக்கிறதும் சிரமம், நமக்கும் ஒரு விதமான மன அழுத்தம் வந்துரும் . கடன் வாங்குறதுல ரொம்ப சூதானமா இருக்கணும். இப்பவும் நான் என்னா சொல்லேறனா எனக்கு சொந்த இடம் இருக்கிறதால சுலமாக இருக்கு. வெளிய சம்பளத்துக்கு வேலைக்கு போனா வாங்குறதுல ஒரு ரெண்டு மடங்கு அதிகமாதான் வருது.

மனநிறைவாக உள்ளது . சில படிச்ச பயலுகள் ஆலோசனையும் கேட்குறாங்க, அவர்களுக்கு நான் சொல்றது, கடுமையாக உழைத்தேன். ஆனாலும் சில நேரங்களில் திரும்ப எதாச்சும் வேலைக்கு போயிறலாம்னு கூட தோணும். இப்போ போற மாதிரி தொடர்ச்சியாக லாபத்துல மட்டும் போக முடியாது. வறட்சி, காலமாற்றம் சில சமயத்துல அச்சம் படுத்தும் அப்போ வருமானத்துக்கு இரண்டு மூணு தொழிலை கையில் எப்பவும் வச்சிகிறனும். கடைசியா ஒன்னு சொல்றேன் விவசாயத்த கற்று கொடுக்கிற அரசு அதை எப்படி விற்கணும்னு மார்க்கெட்டிங்க சொல்லி கொடுத்த இன்னம் நல்லா இருக்கும்.

எழுத்து : மா.நிருபன் சக்கரவர்த்தி

Advertisement:
SHARE

Related posts

தியேட்டர்கள் மூடல்.. ஓடிடியை நாடும் திரைப்படங்கள்!

Halley karthi

கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!

Gayathri Venkatesan

பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!

Niruban Chakkaaravarthi