முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

நம்பவைத்து கழுத்தறுத்த ஒருவரையும்  சும்மா விடக்கூடாது என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனவும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கவுரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

 

கிருஷ்ணகிரி சம்பவத்தில் மூவர் சரணடைந்த நிலையில், போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கவுரவ கொலை செய்யப்பட்ட கணவருடன் எடுத்த புகைப்படங்களை, ஒவ்வொன்றாக செல்போனில் கண்டு கதறி அழும் இளம் பெண்ணின் நிலமை பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞரும், அவதானப்பட்டியை அடுத்த புழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சரண்யா குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிப்ரவரி மாதம் இருவரும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத சரண்யா குடும்பத்தார், ஜெகன் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மார்ச் 21 ஆம் தேதி டேம்  சாலை வழியாக காவேரிப்பட்டினம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த ஜெகனை, சரண்யாவின் தந்தை சங்கர் உட்பட உறவினர்கள் மூவர் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். காதல் திருமணம் செய்ததற்காக மருமகனை மாமனாரே வெட்டி கவுரவ கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவேரிப் பட்டினம் போலீசார் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜெகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் அன்றைய தினமே கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக இருந்த கொலையாளிகளை போலீசார் வலைவீசித் தேடி வந்த நிலையில், மார்ச் 23 ஆம் தேதி ஜெகன் கொலையில் தொடர்புடைய நாகராஜ், முரளி ஆகிய இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திருமணமான இரண்டு மாதங்களுக்குள் இளைஞர் கவுரவ கொலை செய்யப்பட்ட விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

கவுரவக் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டு கவுரவக் கொலைச் சம்பவங்களை தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட ஜெகனின் உடல் உடற்கூறாய்விற்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ”என்ன ராணி மாதிரி பாத்துகிட்டவர நம்பவச்சு கழுத்தறுத்துட்டாங்களே“ எனக்கூறி கதறி அழுத ஜெகன் மனைவி சரண்யா, தனது கணவரின் கொலையில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது எனவும், அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கவுரவக் கொலை செய்யப்பட்ட ஜெகனுடைய குடும்பத்தாருக்கு நிவாரணமும், வாழ்க்கையை இழந்து தவிக்கும் ஜெகன் மனைவி சரண்யாவிற்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும் என குடும்பத்தார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram