ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள பல வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை. வாக்காளர் பட்டியலை பூத் வாரியாக வீடு வீடுடாக சென்று ஆய்வு செய்து அதை அறிக்கையாகவும் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளோம்.
ஒரே வீட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒரே முகவரியில் இல்லாமல் வெவ்வேறு முகவரிகளில் உள்ளனர். இறந்தவர்கள் பெயர்கள் கூட வாக்காளர்கள் பட்டியலில் உள்ளது. சுமார் 40,000 வாக்குகள் மோசடியாக உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்து, தேர்தல் மிகவும் நேர்மையாகவும், நடுநிலையுடனும் நடக்க நடவடிககை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா









