இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான இயான் மோர்கன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2019 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர் இயான் மோர்கன். அயர்லாந்து நாட்டில் பிறந்த மோர்கன் (36), 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். 2009 மே முதல் கடந்த 2022 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்.
ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும், தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார். இந்நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.
இயான் மோர்கன் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களும், 15 டி20 போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2458 ரன்களும் எடுத்துள்ளார்.
இதுகுறித்து, மோர்கன் கூறுகையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நேசிக்கும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள இதுதான் சரியான நேரம். எல்லா நேரங்களிலும் என் குடும்பத்தினர், நண்பர்கள் எனக்குத் துணையாக இருந்துள்ளனர்.
குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. களத்தில் விளையாட தான் ஓய்வை அறிவித்துள்ளேன். வர்ணனையாளராக, வல்லுநராகவோ கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்ந்து பயணிப்பேன் என்றார்.
-ம.பவித்ரா








