எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை மறைமுகமாக சாடும் வகையில் இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்டத்தின் ஆட்சி குறித்து பொது விவாதம் நடைபெற்றது. இந்த பொதுவிவாதத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த விவாதத்தில் ருசிரா காம்போஜ் பேசியதாவது: குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பயன்படுத்தும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அரசியல் தேவைகளுக்காக இரட்டை நிலைப்பாடு எடுக்காமல் பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
உலகளவில் சட்டத்தின் ஆட்சியின் பயன்பாடு என்பது நாட்டினுடைய இறையாண்மையையும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து பிராந்திய ஒருமைபாட்டை பாதுகாப்பதுமே ஆகும்.
சர்வதேச அளவில் நல்லுறவை பேணும்போது சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும் வலுப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் தீர்வு காணப்படுவது ஒரு முக்கியமான அம்சமாகும். தங்கள் சொந்த இறையான்மை மதிகப்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தால் ஒருவொருக்கொருவர் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டை மதிக்க வேண்டும். இவ்வாறு ருசிரா காம்போஜ் தெரிவித்தார்.
ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரஸ் பேசுகையில், சட்டத்தின் ஆட்சியை வலிமைப்படுத்தும் போது சர்வதேச அளவில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்தார்.