மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவை மாவட்டத்திற்கு செல்லும் மூன்றாவது மாற்றுப்பாதையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளதால், இங்கு காட்டு யானைகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி கெத்தை மலைப்பாதை வழியாக சென்றுள்ளது. அப்போது கெத்தை மலைப்பாதையில் இரு குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக, சாலை ஓரத்தில் உள்ள செடி கொடிகளை சாப்பிட்டும், சாலையில் நின்றும்
கொண்டிருந்தன.
வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே, குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலை ஓரங்களில் உலா வந்தும், மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலையில் நின்று கொண்டிருப்பதை அறிந்த பேருந்து ஓட்டுநர் யானைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க பேருந்தை நிறுத்தினார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாலையில் நின்ற காட்டு யானைகள் அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் சற்று நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
இதனையடுத்து அரசு பேருந்து மஞ்சூர் நோக்கி இயக்கப்பட்டது. காட்டு யானைகள் அரசு
பேருந்தை வழிமறித்து நின்றதை பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றத்துடன் வீடியோவாகவும் எடுத்து பதிவு செய்து வெளியிட்டனர்.








