இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் காஸாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ம் தேதி சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.
அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், அங்கிருந்த 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் படுகொலை செய்தனர். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 20 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவும் இஸ்ரேல் ராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது. இதற்காக ஏராளமான பீரங்கிகள், கவச வாகனங்களுடன் இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தரைவழித் தாக்குதலுக்கு முன்னேற்படாக எல்லைக்குள் ஊடுருவி இஸ்ரேல் பீரங்கிகள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தின. எல்லையில் அமைந்துள்ள ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இதனைதொடர்ந்து இன்று 2வது நாளாக காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
“காஸாவுக்குள் இஸ்ரேல் படையினர் மீண்டும் நுழைந்து பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். காஸாவின் ஷிஜையா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்களும், பீரங்கிகளும் எதிரி இலக்குகளை சரமாரியாக தாக்கி அழித்தன. அதன் உதவியுடன் ஹமாஸ் நிலைகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு எந்த உயிர்ச்சேதமோ, காயமோ இல்லாமல் இஸ்ரேல் படையினர் காஸா பகுதியிலிருந்து திரும்பினர்.
இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஊடுருவல் தாக்குதல் மூலம், பல ஹமாஸ் அமைப்பினரைக் கொல்லவும், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை அழிக்கவும் இஸ்ரேல் படையினரால் முடிந்தது. காஸாவுக்குள் முழுமையாக நுழைந்து தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காஸாவில் கடந்த 20 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரி தாக்குதலில் இதுவரை 7,326 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், மேற்குக் கரையில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள், இஸ்ரேல் வீரா்களுடன் மோதலில் ஈடுபட்டவா்கள் என 110 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தவிர, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது நடைபெற்று வரும் மோதல் காரணமாக லெபனானில் இதுவரை 60 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







