பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற கந்தூரி விழாவில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தர்காக்களில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று. இங்கு நடைபெறும் கந்தூரி விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம்.
குறிப்பாக இங்கு சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தீப விளக்கு ஏற்றும் விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்களும் விளக்கேற்றி பங்கேற்பது கூடுதல் சிறப்பாகும். அதன்படி, இந்தாண்டு கந்தூரி விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான அரண்மனை கொடி ஊர்வலம் கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்த கொடியேற்ற விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான அலங்கார தீப திடலில் அனைத்து மதத்தினரும் விளக்கேற்றும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.







