பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
கேரள சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் . அவர் கூறியதாவது:
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்துள்ளேன். ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் I.N.D.I.A கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி எடுத்தது.
நரேந்திர மோடி அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், அது நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்லும், அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதனால்தான், பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற குழுக்களையும் ஒன்றிணைத்து போராட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
I.N.D.I.A கூட்டணி உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்டதற்கு, சில மாநிலங்களில் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்று சென்னிதலா கூறினார்.
எனவே, பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வருவதற்கான பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம் என ரமேஷ் சென்னிதலா கூறினார்.







