காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தவிர, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த உயர்மட்ட கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்துவோம். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை பாஜக உடனே அமல்படுத்தியிருக்கலாம், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதை செய்யவில்லை.

“காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முழு மனதுடன் ஆதரித்தன. மோடி விரும்பினால் இந்தத் தேர்தலில் இருந்தே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியிருக்கலாம். இந்த மசோதா விளம்பரம் மற்றும் வாக்கு வங்கிக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் கொடுப்பதில் காங்கிரஸ் அதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2024ல் ஆட்சிக்கு வந்தால், ஓபிசி பெண்களின் அரசியல் பங்களிப்பை நிர்ணயிப்பதோடு, பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் உடனடியாக அமல்படுத்துவோம்.

அரசாங்கத்தின் தோல்விகள் மற்றும் அதன் தவறான பிரச்சாரங்களை முன்னிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு கட்சித் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். SC, ST மற்றும் OBC களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப சமூக நீதி மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்காக நாடு தழுவிய ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கார்கே எழுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் பாஜக அமைதியாக இருப்பதை கோடிட்டுக் காட்டினார்.

புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களிடையே உள்ள அதிருப்தியை அரசாங்கம் புறக்கணிக்கிறது என்று அவர் கூறினார், மத்திய அரசு தனது அரசியல் போட்டியாளர்களை குறிவைக்க விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.