செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது. தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, தடுப்பூசி கொள்முதல்…

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது.

தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகலாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேவேளையில், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இதையடுத்து, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கொரோனா தடுப்பூசி உற்பத்தி யை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் நிறுவனமான ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்திற்கு, உற்பத்தியை தொடங்கு வதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

தடுப்பூசி மையத்தை உடனடியாக தமிழக அரசே ஏற்று நடத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. அதுகுறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.