மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று கூறப்பட்டாலும் கூட, அவற்றை விட வட மாவட்டங்கள் தான் அதிக அளவில் நெற்பயிரை சாகுபடி செய்கின்றன. தமிழகத்தில் நெல் உற்பத்தி திறனில் முதலிடத்தில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான். அங்கு ஒரு ஹெக்டேரில் 4,490 கிலோ நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் தேவையை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பிப்ரவரியில் 20 கொள்முதல் நிலையங்களை திறக்க ஆணையிட்டார். அவரே இப்பொழுது 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட ஆணையிட்டிருக்கிறார். இது எந்த வகையில் நியாயம்” என கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை போதுமானவையாக இல்லை என்று கூறப்படும் நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதால் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற அவர், விழுப்புரத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், மாறாக இருக்கும் கொள்முதல் நிலையங்களையும் மூடக் கூடாது. இதை மனதில் கொண்டு, உழவர்களின் நலனைக் காக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.







