எந்த மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் கல்வி கற்கிறர்களா என்பதுதான் முக்கியமே தவிர, அவர்கள் எந்த ஆடை அணிகிறார்கள் என்பது முக்கியமில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் எனப்படும் இஸ்லாமிய கலாச்சார ஆடையை அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வெடித்துள்ள சர்ச்சைகளும் போராட்டங்களும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதநம்பிக்கைகளையும் அடையாளங்களையும் கடைபிடிக்கும் விஷயத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்துகொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணியவும், இந்துக்கள் பல வகையான திலகங்கள் திருநீறு பூசிக் கொள்ளவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதிப்பதாகவும் அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணிவதையும் பார்க்க வேண்டும் . முகத்தை மறைக்காமல் தலையை மட்டும் மறைக்கும் ஹிஜாப் அணிவதை அனுமதிக்கலாம் என கல்வியாளர்கள் வழிகாட்டியுள்ள நிலையில் இந்தியாவில் அத்தகைய ஹிஜாப்தான் மாணவிகளால் அணியப்படுகின்றன என்பதால் அவற்றை அனுமதிப்பதில் தவறில்லை .
இந்தியாவில் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு இப்போதுதான் கல்வி வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.