அதிமுக-வில் ஆதாயமடைந்தவர்கள் தேவையில்லை என்றும் உழைப்பவர்கள் தான் தேவை என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால் இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பதுதான் என சுட்டிக்காட்டினார்.
சசிகலாவும், அவருடைய குடும்பமும் வரக்கூடாது என்பதற்குதான் தர்மயுத்தமே நடத்தினார். ஆனால் சுயநலத்திற்காக தன்னுடைய நிறத்தை இப்போது ஓ.பன்னீர்செல்வம் காட்டியிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். ஒன்றினைவது பற்றி இன்று கருத்து கூறும் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு நேராக வந்திருந்தால், கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கிறார் என்று ஏற்றிருப்போம்.
ஆனால் அதற்கு எதிர்மறையாக மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமர்ந்த கட்சி அலுவலகத்தை சூறையாடினார். அதற்கு தலைமை ஏற்றவர் தான் ஓபிஎஸ், அப்போது ஏன் இந்த ஒற்றுமை கருத்து அவருக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
கட்சிக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் வெளியில் இருக்கிறார்கள். கட்சியில் ஆதாயமடைந்தவர்களை தான் அவர் ஒன்றிணைய கூறுகிறார். எனவே ஆதாயமடைந்தவர்கள் கட்சிக்கு தேவையில்லை என்றும் உழைப்பவர்கள் தான் தேவை என்றும் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








