அரசு ஊழியர்கள் பதவி உயர்வை தனது உரிமையாக கேட்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை வளர்நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தகுதியான மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் ஆய்வுக்குழு முடிவு செய்யும். மத்திய ஆய்வுக்குழுவின் கூட்டம் நடத்தப்பட்டால் எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு கிடைத்திருக்கும். எனவே, ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதற்காக மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு பொது ஊழியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது.
பதவி உயர்வு என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான். அதே நேரம், பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான நபர்களை நிர்வாகம்தான் தேர்வு செய்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பதவி உயர்வு பெற தகுதி இருந்தாலும், தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென நிர்வாகத்திடம் கேட்க முடியாது. மத்திய ஆய்வுக்குழு கூட்டம் நடந்திருந்தால் தனக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும் என்பது கற்பனையானது.
எதிர்கால நிகழ்வுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. டிஆர்ஓ-க்களுக்கான பதவி உயர்வு குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
இதற்காக ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது. பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது என்பது நிர்வாக ரீதியான முடிவாகும். இது அரசின் சிறப்புரிமை. எனவே, குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்புமாறும், பதவி உயர்வு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட முடியாது என்பதால் மனுதாரர் கேட்கும் நிவாரணத்தை வழங்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.