காங்கிரசின் சிந்தனை அமர்விற்கு அன்றே வித்திட்ட காமராசர் !

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே பார்க்கப்படுகிறது. கே-பிளானுக்கும், சிந்தனை…

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே பார்க்கப்படுகிறது. கே-பிளானுக்கும், சிந்தனை அமர்வுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன என்பதை சற்று ஆழமாக பார்க்கலாம்.

ஒரு அரசியல் தலைவருக்கு மிக முக்கியமாக கடமை என்பது தன்னை விட கட்சி பெரியது. கட்சியை விட நாட்டு நலன் முக்கியம் என சிந்திக்க வேண்டும். இந்த எண்ணம் இல்லாத எந்தவொரு தலைவராலும் நாட்டு மக்களை மகிழச்சியுடன் வைத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராசர். வேறு எவரும் செய்ய தயங்கும் அந்த விஷயத்தை எவ்வித சலனமின்றி சர்வ சாதரணமாக செய்தார்.  அந்த காரியத்தை நிச்சயமாக செய்யமுடியாது, ஆனால் காமராசர் செய்தார்.

தாம் கொண்டுவந்த ’கே-பிளான்’ திட்டத்தை  சாத்தியமாக்க ஒன்பது ஆண்டுகளாக வகித்துக்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் பதவியை பக்தவச்சலத்திடம் விட்டுக்கொடுத்தார். கட்சியின் மூத்த தலைவர்கள், தங்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று காமராஜர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு, தாம் வகித்து வந்த முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார் காமராஜர்.

லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் கே-பிளானை மனதார ஏற்றுக்கொண்டு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள். மேலும் அவரது கே – பிளானை ஏற்றுக்கொண்டு நாடு முழுவதும் பல முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை விட்டுவிலகி கட்சிப்பணியாற்ற களம் இறங்கினர். பெரும் புரட்சியாக பார்க்கப்பட்ட அந்த பிளான் காரணமாக இந்தியாவின் பல இலட்சம் இளைஞர்கள் ஆர்வத்துடன் காங்கிரஸில் இணைந்தனர். உண்மையில் 1960-களுக்கு பிறகு அகில இந்திய அளவில் காங்கிரஸிற்கு பல நெருக்கடிகள் உருவாகியபோதும் கட்சி உயிர்ப்போடு இருந்ததற்கு காரணம் கே-பிளான் தான் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

எவரெஸ்ட் சிகரம் போல் உலகமே திரும்பி பார்க்க வேண்டிய காங்கிரஸ் கட்சியின் நிலையோ இன்று கேள்விக்குறியாக உள்ளது. கோஷ்டி பூசல் ஒரு பக்கம் என்றால், கல்லறை செல்லும் வரை தமது பதவிகளை இளைய தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாத தலைவர்கள் போன்றவைகள்தான் இன்றைய காங்கிரசின் பெரும் சரிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் என்னவோ அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்று சில ஆண்டுகளிலேயே அதனை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி எனக் கூறுவதும் உண்டு. நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு, பணமதிப்பிழப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு, வேலை வாய்ப்பின்மை இப்படி எண்ணற்ற பிரச்சனைகள் நாட்டில் உள்ளன.

அதற்கு காரணமான மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை மக்கள் முன் தோலுரித்து காட்ட வேண்டிய காங்கிரசோ பரிதாப நிலையில் உள்ளது. இத்தனை பிரச்சனைகள் இருந்தும் அவை மக்களின் முன் தேர்தலில் எடுபடவில்லை. அது பாரதிய ஜனதாவின் சாதுர்யம் என்பதை விட, காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை என்றே எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இதனையெல்லாம் மனதில் வைத்துதான் சிந்தனை அமர்வு என்ற கூட்டத்தை மூன்று நாட்கள் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சி நடத்தியது.

இதில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் முக்கியமானது இளைய தலைமுறையினர் காங்கிரஸ் பக்கம் ஈர்க்க வேண்டுமென்றால், 50 வயதிற்கு குறைவானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட 50 சதவீத இடங்களை ஒதுக்குவது என்பதாகும். காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு ஓய்வு அளிப்பது போன்றவையாகும். இவை எல்லாமே கே-பிளானில் அன்று காமராசர் வகுத்த திட்டம் போல் உள்ளது என்பதே நிதர்சன உண்மையாகும்.

இந்த சிந்தனை அமர்வு மாநாட்டில்,  காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்று விதி அமல்படுத்தப்படும் என்பது பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதுநடைமுறைக்கு வருமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட உள்ள மொத்த தொகுதியில் பாதி இடங்களுக்கு 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வாய்ப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மற்றும் சட்டப் சபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கவும், தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள விதிகள் ஏழை குழந்தைகளின் சம உரிமையை பறிப்பதாகவும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் என்றும் காங்கிரஸ் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதிக் கணக்கெடுப்புத் தரவை மத்திய அரசு வேண்டுமென்றே வெளியிடவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பறிப்பதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதிக் கணக்கெடுப்புத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பெறவும் தீவிர போராட்டத்தை நடத்துவது என்றும், உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவது பெரிதல்ல. அவற்றை நடைமுறைப்படுத்தும் விதமாக காமராசர் போல் தலைவர்கள் தங்களது பதவிகளை துறக்க முன் வர வேண்டும். அதுவே இளைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சியில் இணைய உந்து சக்தியாக அமையும். வெற்று காகிதங்களில் எழுதப்படும் தீர்மானங்களுக்கு அக்கட்சி தலைவர்கள் உயிர் கொடுப்பார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இராமானுஜம்.கி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.