திமுக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல தனி வியூகத்தை அமைத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலர் திமுக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். இதில், மேற்கு தமிழ்நாடு, தென் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும் தங்களின் அடுத்தக் கட்ட அரசியல் வளர்ச்சிக்காக திமுகவை நோக்கி படையெடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை சமாளிக்கவும், அதிமுகவை பலப்படுத்தும் நோக்கத்திலும் எடப்பாடி பழனிசாமி புது ரூட்டை கையில் எடுத்துள்ளார். அதுதான் கிராமங்களை நோக்கி செல் என்பது.
இபிஎஸ்-ஐ சந்திக்கும் அதிமுக நிர்வாகிகள்:
அதிமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் முடிந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை, மாவட்ட செயலாளர்கள் வரை தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் அந்த இரண்டு பேர் யார் என்பதை அதிமுக தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கான பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தினம் தினம் நேரில் சந்தித்து வருகின்றன. கட்சியை பலப்படுத்துவது தொடபாக தங்களின் ஆலோசனைகளையும் கூறியுள்ளனர். இதில், திருப்தியாகியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவை பலப்படுத்த கிராமம் கிராமமாக சென்று கட்சி கட்டமைப்பை உறுதியானதாக மாற்றப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
திமுகவுக்கு நெருக்கடி தரும் இபிஎஸ்:
முன்னீர்பள்ளம் கல்குவாரி விபத்து, பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு போராட்டம் உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமாக மாற்ற உள்ளார். அதாவது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் சிறந்த எதிர்க்கட்சி என்ற பெயர் வாங்கிவிட திட்டம் தீட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது,திமுக ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் கையில் எடுத்த நமக்கு நாமே திட்டம் போல இபிஎஸ்-ம் கிராமங்களை நோக்கி சென்று மக்களை சந்தித்து கட்சியை பலப்படுத்த போகிறார். இதில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறவைக்க உதவும் என்று அதிமுக நிர்வாகிகள் நம்புகிறார்கள்.
இபிஎஸ்-க்கு நெருக்கடி தரும் சசிகலா:
பரப்பன்ன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்ததில் இருந்தே சசிகலாவின் அரசியல் நகர்வுகளை இபிஎஸ் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு கூட சசிகலா ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில், சசிகலா ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு பிளவை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கிறார். இதற்காகவும், கிராம் கிராமமாக சென்று அதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து தனது ஆளுமையை இபிஎஸ் உறுதிப்படுத்த போவதாக கூறப்படுகிறது.
மேற்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது:
அதிமுகவில் இபிஎஸ் கை ஓங்கியதில் இருந்தே தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளின் கை தாழ்ந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் கூட அதிமுக தோல்விக்கு காரணம் தென் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் கிடைத்த தொகுதிகளின் வெற்றியாக உள்ளது. ஜெ.இருந்தபோது, மொத்தம் 61 எம்எல்ஏக்கள் இருந்தனர்.. இதே வாக்குவங்கியை இப்போதுவரை இபிஎஸ் தக்க வைத்து வருகிறார். இந்நிலையில், தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்த இபிஎஸ்-இன் இந்த கிராமங்களை நோக்கிய சுற்றுப்பயணம் கைகொடுக்கும் என்று நம்புகிறார்.
ஆக மொத்தத்தில் இபிஎஸ் எடுத்துள்ள இந்த வியூகம் தனது ஆளுமையை அதிமுகவில் மேலும் நிலை நாட்டுவதுடன் கட்சியை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க இபிஎஸ் திட்டம் வகுத்துள்ளார்.







