என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி

தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து…

தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களை அச்சுறுத்தி நிலங்களை எடுக்கும் என்எல்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து, அன்புமணி தலைமையில் பாமகவினர் ஏராளமானோர் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அன்புமணி உள்ளிட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறை வாகனத்தில் இருந்தபடியே செய்தியாளர்கள்களுக்கு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என்.எல்.சி. விவகாரம் அனைவருக்குமான பிரச்னை. மண்ணையும் மக்களையும் அழித்து மின்சாரம் எடுக்க தேவையில்லை. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்துவிட்டது. தற்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு என்எல்சி தேவையில்லை. மின்சாரம் தயாரிக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும். விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் .

மேலும் என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராடும். என்எல்சி நிறுவனத்திற்கு உடந்தையாக காவல்துறை உள்ளது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி கைது செய்யப்பட்ட போது போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.