சென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்

சென்னை அண்ணா சாலையில் கட்டடம் இடிந்து விழுந்து, உயிரிழந்த ஐடி நிறுவன பெண் ஊழியரின் உடல், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பு பணியின்…

சென்னை அண்ணா சாலையில் கட்டடம் இடிந்து விழுந்து, உயிரிழந்த ஐடி நிறுவன பெண் ஊழியரின் உடல், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பு பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் பத்மபிரியா உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்தை பெறுவதற்காக அவரது பெற்றோர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அப்போது பேசிய பத்ம பிரியாவின் தந்தை பாண்டி முருகேசன், தனது மகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. “எனது மகள் எம்டெக் படிப்பை முடித்துவிட்டு, கடந்த மாதம் தான் வேலை கிடைத்து சென்னைக்கு வந்து ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் . இந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்து சென்றார். அப்பொழுது தான் அவளை நான் கடைசியாக பார்த்தேன்.

என் மகள் இறந்துவிட்டார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாநகராட்சி அலட்சியத்தால் தான் எனது மகளின் உயிர் பறிபோனது. பல கனவுகளுடன் வளர்த்த எனது மகள் தற்போது எங்களை விட்டு பிரிந்து சென்றது எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய பத்மபிரியாவின் சகோதரர் கெளதம், “எனது சகோதரியின் மரணம் தொடர்பாக இரண்டு பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இன்னும் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனது தங்கையின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் எங்களது சகோதரியின் சடலத்தை வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பத்மபிரியாவின் உறவினர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் பத்ம பிரியாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பத்ம பிரியாவின் உடலுக்கு, சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உறவினர்கள் இறுதிசடங்குகளை செய்ததை தொடர்ந்து, பத்ம பிரியாவின் தந்தை பாண்டி முருகேசன் கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதனைதொடர்ந்து பத்மபிரியாவின் உடல் உசிலம்பட்டி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி மரியாதை செய்த பின்னர், உடல் தகனம்செய்யப்பட்டது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.