ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். நேற்று காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விடிய விடிய நடைபெற்ற விசாரணை இன்று அதிகாலை 3.15 மணி வரை நீடித்தது. பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் : மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!
இதனைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஜனசேனா, பாஜக கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சித்தூர், திருப்பதி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து ஆந்திராவில் பதற்றம் நிலவி வருகிறது.







