மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ஒரு கோடியே 6 லட்சம் பேர் தேர்வாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், தகுதி வாய்ந்தவர்களுக்கான உரிமைத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகுதிபெற்ற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இத்திட்டத்திற்கு தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர்க்க முடியாததற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.மகளிர் உரிமைத்தொகை வழங்க ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.