“மத்திய அரசு வேண்டுமென்றே ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிக்க அனுமதித்துள்ளது” – கர்நாடக முதலமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மத்திய அரசு வேண்டுமென்றே பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும், ‘நமது தாய், சகோதரிகளுக்கு நீதி கிடைக்கப் போராடுவது காங்கிரஸ் கட்சிக்கு தார்மீகக் கடமை’ எனவும் ராகுல் காந்தி கர்நாடக முதலமைச்சர்…

மத்திய அரசு வேண்டுமென்றே பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும், ‘நமது தாய், சகோதரிகளுக்கு நீதி கிடைக்கப் போராடுவது காங்கிரஸ் கட்சிக்கு தார்மீகக் கடமை’ எனவும் ராகுல் காந்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்.பியாக இருக்கும் இவர் கர்நாடகாவில் 2வது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

மேலும், ரேவண்ணா ஜெர்மனில் இருப்பதால், அவருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதினார். அத்துடன் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

“ஹசன் நாடாளுமன்ற உறுப்பினரின் கொடூரமான பாலியல் வன்முறை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன். பிரஜ்வல் ரேவண்ணா பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இல்லாமல் அதனை படம் பிடித்து உள்ளார். அவரை அண்ணனாகவும் மகனாகவும் பார்த்த பலர் மிகக் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தப்பட்டு கண்ணியத்தை பறிகொடுத்தனர். 

நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும். டிசம்பர் 2023ல் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்முறை வரலாறு மற்றும் அதனை படம்பிடித்த வீடியோக்கள் குறித்து, தேவராஜா கவுடா நமது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும், அது கண்டுக்கொல்லப்படவில்லை.

இந்தக் கொடூரமான குற்றச்சாட்டுகள் பாஜகவின் மூத்த தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், பிரதமர் ஒரு வெகுஜன பலாத்கார குற்றவாளிக்காக பிரச்சாரம் செய்ததுதான் அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது. மேலும், மத்திய அரசு வேண்டுமென்றே அவரை இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்து இருக்கிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஆசியுடன் பிரஜ்வல் ரேவண்ணா இருந்திருக்கிறார் என்பது கண்டனத்திற்கு உரியது.

எனது 20 ஆண்டு பொது வாழ்வில், பெண்களுக்கு எதிரான சொல்லொணா வன்முறைகளை எதிர்கொண்டு தொடர்ந்து மௌனத்தைத் தேர்ந்தெடுத்த ஒரு மூத்த பொதுப் பிரதிநிதியை (பிரதமர்) நான் சந்தித்ததில்லை. ஹரியானாவில் உள்ள மல்யுத்த வீரர்கள் முதல் மணிப்பூரில் உள்ள சகோதரிகள் வரை, இதுபோன்ற குற்றவாளிகளுக்கு பிரதமரின் மறைமுக ஆதரவின் சுமையை இந்தியப் பெண்கள் சுமந்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் நமது தாய், சகோதரிகளுக்கு நீதி கிடைக்கப் போராடுவது காங்கிரஸ் கட்சிக்கு தார்மீகக் கடமை. கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவின் திருட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்து அவரை விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் நீதிக்காகப் போராடும் நமது இரக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் தகுதியானவர்கள். இந்த கொடூரமான குற்றங்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கூட்டு கடமை நாம் அனைவருக்கும் இருக்கிறது”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.