ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய கூட்டு தாக்குதலை தொடர்ந்து மேற்காசிய பிராந்தியத்தில் போர் நடைபெற்று வருகிறது. போர் எதிரொலியாக ஹார்முஸ் நீரிணைப்பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், இதனால் 5 நாட்களுக்குப் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சத் திட்டத்தையும் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு ஈரான் சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அவை ,
- வளைகுடாப் பகுதி முழுவதும் அமைந்துள்ள அமெரிக்காவின் அனைத்து இராணுவத் தளங்களையும் மூடுதல்
- அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குதல்
- சூயஸ் கால்வாயின் மீது எகிப்துக்கு உள்ள கட்டுப்பாட்டைப் போலவே, ஈரான் போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஒரு புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுதல்
- இரு தரப்பினருக்கும் இடையிலான பகைமை மீண்டும் தொடங்காது என்பதை உறுதிசெய்யும் உறுதியான உத்தரவாதங்கள்
- ஈரான் ஆதரவு லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவை இலக்காகக் கொண்ட இஸ்ரேலியத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துதல்
- ஈரான் மீது விதிக்கப்பட்ட சர்வதேசத் தடைகளை முழுமையாக நீக்குதல், உள்ளிட்டவை ஆகும்.
இந்த நிபந்தனைப் பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் “கேலிக்குரியவை மற்றும் யதார்த்தமற்றவை” என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.







