இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமாக நீண்டநாட்கள் பதவி வகிப்பவர் என்கிற சாதனையை நரேந்திர மோடி படைத்துள்ளார். இதனை தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் – அவர் ஒரு மிகச்சிறந்த பிரதமர்! அவர் வலிமையான, ஆரோக்கியமான மற்றும் ஞானம் மிக்க ஒருவர்; அவருக்கு முன்னால் இன்னும் பல ஆண்டுகள் சிறப்பும் வெற்றியும் காத்திருக்கின்றன” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டிரம்பின் வாழ்த்திற்கு இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “அதிபர் ட்ரம்ப் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது இரு நாடுகளுக்கும் மற்றும் உலகிற்கும் நன்மை பயக்கும் வகையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.




