டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லி மதுபான விற்பனையில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அம்மாநிலத்தின் மதுபான கொள்கை மாற்றப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தினர். பல மணி நேரம் மணிஷ் சிசோடியாவிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை செய்து வருகிறது. இதுகுறித்து மணிஷ் சிசோடியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ என்னுடைய அலுவலகத்தில் இன்று சிபிஐ சோதனை நடத்தியது. அவர்களை வரவேற்கிறேன். எனது வீட்டில் உள்ள லாக்கர்களை பரிசோதித்தார்கள். என்னைப் பற்றி எனது கிராமத்தில் விசாரித்துள்ளார்கள். எதையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் நான் எந்த தவறும் செய்யவில்லை. டெல்லி குழந்தைகளின் கல்விக்காக நேர்மையாக பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த வழக்கில் அவர்களால் எதையுமே கண்டறிய முடியவில்லை” என்று தெரிவித்தார். இந்த விசாரணை குஜராத் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தலின் போது தொடங்கியது குறிப்பிடத்தக்கது.







