மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான…

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை, விழா கமிட்டியினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து ஜல்லிகட்டு நடைபெறும் வாடிவாசல், பார்வையாளர் மாடம், பரிசுபொருள் மாடம் மற்றும் இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கபட்டு தயார் நிலையில் உள்ளன. காளைகள் சேகரிக்கும் இடம், காளைகள், வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும் பகுதிகள் ஆகியவை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதேபோல் பேரூராட்சி நிர்வாகத்தினர் காளைகளுக்கும், வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். போட்டியில் வெல்லும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களும் தயார் நிலையில் உள்ளன.

வாடிவாசலில் விளையாடிய பின் ஓடி வரும் காளைகளை, உரிமையாளர்கள் சேகரித்த பின்னர், மருத்துவ பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவக்குழு தயார் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் சுமார் 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளையின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்யபட்ட அனுமதி சீட்டுடன் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பாக காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்த பின்னர் வாடிவாசலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டிற்காக நியமிக்கபட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.