ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்டகால செயல் திட்டங்களில் ஒன்றாகும்.
பிரிவு 370-ஐ நீக்கிய உடனேயே அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை ரத்து மற்றும் முக்கியமான அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறை போன்றவற்றை மத்திய அரசு அமலில் கொண்டுவந்தது.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரின் சிறப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்றைய தினம் வழக்கின் விசாரணை பட்டியலிடப்பட்டிருந்தது.
அப்போது, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம் தோறும் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.







