நான்கு வழிச் சாலையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்களுக்கு பேருந்துக்கள் வர மறுப்பதால் 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே அம்மைநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது கொடைரோடு மற்றும் அம்மைநாயக்கனூர் பேருந்து நிலையம். இவ்விரு பேருந்து நிலையங்களையும் நம்பி சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளனர்.
குறிப்பாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தை படுத்துவதற்காக இப்பேருந்து நிலையங்களையே நம்பி உள்ளனர்.மேலும் இந்த சுற்றுவட்டார பகுதியில் எவ்வித கல்லூரிகளும் இல்லாததால் மதுரை மற்றும் திண்டுக்கல் சென்று படிக்க கூடிய மாணவர்கள் இந்த பேருந்து நிலையத்தை தான் நம்பி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட நான்கு வழிச் சாலையினால்
அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் கொடைரோடு ஊருக்குள் வராமல் நான்கு வழிச் சாலையிலே சென்று விடுகின்றன. இதனால் கடுமையாக இப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.மேலும் பேருந்துக்காக அருகில் உள்ள சுங்கச் சாவடிக்கு சென்று காத்திருக்கின்றனர்.பலமுறை அரசுக்கு மனு அளித்தும்.போராட்டம் நடத்தியும் மாவட்ட
மற்றும் போக்குவரத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.பேருந்துக்கள் ஏதும் வராததால் தனித்தீவு போல காட்சியளிக்கும் இப்பகுதி வணிக ரீதியாக கடுமையாக சரிவை சந்திதுள்ளன.
இப்பிரச்னையில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என இப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
—–வேந்தன்









