ராகுல் காந்தியின் பதவியை இழக்க செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவடுவர் என அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடம், சென்னை – கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இதேபோல திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை துவக்கி வைக்க உள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் பெயரை அவமதித்த வழக்கில் ராகுல் காந்தி சிறை தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
https://twitter.com/SPK_TNCC/status/1644187000852074496
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ராகுல் காந்தியின் எம்பி பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என தெரிவித்துள்ளார்.







