பாஜகவின் 10 தொகுதிகள் வியூகம் : களமிறங்கிய தலைவர்கள் – பலிக்குமா பாஜக கணக்கு?

மக்களவைத் தேர்தல் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் தேசிய, மாநில தலைவர்களின் அடுத்தடுத்த ஆலோசனைகள் என்ன..? பாஜக என்ன செய்யப் போகிறது என்பது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.…

மக்களவைத் தேர்தல் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் தேசிய, மாநில தலைவர்களின் அடுத்தடுத்த ஆலோசனைகள் என்ன..? பாஜக என்ன செய்யப் போகிறது என்பது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக பல்வேறு வியூகங்களை மாநிலவாரியாக வகுத்து, அவற்றை செயல்படுத்தியும் வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2014ல் தனி அணி அமைத்து அக்கட்சிக்கு ஒரு எம்.பி கிடைத்தார். கடந்த 2019ல் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சிக்கு அந்த ஒருவரும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த முறை தென்னிந்தியாவில் இருந்து அதிக எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து 5 முதல் 10 எம்.பிக்களை பாஜக பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.

அதிக இடங்களுக்கு இலக்கு

தேசிய அளவிலும் கருத்துக் கணிப்புகளைக் கடந்து, முன்பை விட கூடுதல் எம்.பிக்கள் என்கிற இலக்கோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியும் வருகின்றனர். ஆனால், அக்கூட்டணியின் முக்கிய கட்சியான அதிமுகவோ, ’’பாஜக கூட்டணியில் நாங்க இல்லை. நன்றி மீண்டும் வராதீங்க’’ என்று அதிரடி முடிவை எடுத்துள்ளது. கூட்டணி முறிவு என்று எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று அதிமுகவினர் சொல்கிறார்கள்.

ஆனாலும், பாஜக தேசிய தலைமை இது குறித்து மவுனமாகவே இருக்கிறது. தொடரும் மவுனம் பல யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இதன்படி, அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆகையால், எப்படியும் கூட்டணி அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் சிலர் சொல்கின்றனர்.

திமுக Vs பாஜக ?

கூட்டணியில் இருந்து விலகியதற்கு பிறகு, ’’பூத்தில் உட்கார கூட ஆளில்லை. நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி ’’ என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாஜக-வை விமர்சித்துள்ளனர். ஆனால், ‘’ நாங்க முன்னமாதிரி இல்ல, கிராமங்கள் தோறும் சென்று கிளை பரப்பியுள்ளோம். இரண்டாண்டுகளில் பெரிய அளவில் கட்சி வளர்ந்துள்ளது. அதற்கு என் மண் என் மக்கள் நடை பயணத்திற்கு கிடைத்து வரும் ஆதரவே சாட்சி’’ என்கிறார்கள். எனவே ’’வரும் மக்களவைத் தேர்தல் என்பது பாஜக – திமுக இடையில்தான் போட்டி’’ என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லியும் வருகிறார். இதற்கேற்ப திமுக எதிர்ப்பையும் தீவிரப்படுத்தி வருகிறார் அண்ணாமலை.

நிர்வாகிகளின் விருப்பம்

அதேநேரத்தில், ’’2024 மக்களவைத் தேர்தலுக்கான களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை. இப்போது அதற்கான அவசரம் இல்லை’’ என்றும் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால், ஒரு வார காலத்தில் 3 முறை முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி அக்கட்சியினர் ஆலோசித்துள்ளனர். அப்போது, ’’தனித்து களம் இறங்க இது சரியான நேரம் இல்லை. அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தால்தான் சட்டப்பேரவைக்கு 4 பேரை அனுப்ப முடிந்தது. எனவே அதிமுக கூட்டணிதான் நம் வெற்றிக்கு வாய்ப்பு’’ என்று சில தலைவர்கள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ‘’கூட்டணி குறித்து மேலிடத் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கூட்டணி அமைந்தாலும், நாம தனியா கூட்டணியை அமைத்தாலும் வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுகளுக்கு குறையாமல் களமிறங்குவோம். அவற்றில் இப்போது முதல் கூடுதல் கவனம் செலுத்தி, வெற்றி பெறுவோம். அதற்கான பணிகளைத் தொடங்குங்க’’ என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறப்பு கவனம் பெறும் தொகுதிகள்

குறிப்பாக, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, தென் சென்னை, வேலூர் ஆகிய 10 தொதிகளை குறிப்பிடுகின்றனர். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இவை மட்டுமின்றி இன்னும் முக்கியத்துவம் பெற்ற தொகுதிகளும் இருக்கின்றன என்றார். சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகள் இந்த முக்கியத்துவம் பெற்ற வரிசையில் வருகின்றன என்கிறார்கள். குறிப்பிட்ட தொகுதிகள் மட்டுமல்ல 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கவும் தயாராகி வருகிறோம் என்கின்றனர் அக்கட்சியினர்.

களமிறங்கிய தலைவர்கள்

தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதுடன், அங்கு களமிறங்கும் வேட்பாளர்களையும் தேர்வு செய்து, பணிகளைத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், தடா பெரியசாமி உள்ளிட்டோர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களாக களமிறங்க தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இலக்கு வைத்துள்ள தொகுதிகளில் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. இந்த தேர்தலில் பாஜக சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கையும் சொல்கிறார்கள் இளம் நிர்வாகிகள்.

தமிழ்நாட்டில் பாஜக-வின் 10 தொகுதிகளை இலக்கு வைக்கும் கணக்கு பலிக்குமா?
முக்கிய தொகுதிகளில் களமிறங்க போகும் தலைவர்கள் யார்? பாஜகவுடன் கரம் கோர்க்க போகும் கட்சிகள் எவை… பிரதமர் மோடியை முன்னிறுத்தும் வியூகம் வெல்லுமா…? பார்க்கலாம் அடுத்தடுத்த நாட்களில்….

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.