டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சி நிர்வாகிகள் கரு.நாகராஜன், கு.க.செல்வம் மற்றும் மதுவந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், முந்தைய அதிமுக அரசின்போது கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 5ஆயிரம் என்கிற அளவில் இருந்தபோது, ஆர்ப்பாட்டம் செய்த திமுக தற்போது டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், அதனை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினார்.
ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறிய அவர், செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.







