கோயில்கள் மூடியிருக்கும்போது மதுக்கடைகளை மட்டும் திறப்பதா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பாஜக, தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதா? உடனடியாக டாஸ்மாக் திறக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 30 நாட்களில் கட்டுமான பொருட்கள் மூன்றில் ஒரு பங்கு விலை உயர்ந்துள்ளதாகவும், நடுத்தர மக்கள் இனி வீடு கட்ட நினைத்து பார்க்க முடியாது எனவும், சிமெண்ட் கம்பெனிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு 30 நாட்களில் மூட்டைக்கு ரூபாய் 150 உயர்த்தியுள்ளது தான் திமுக அரசின் சாதனை என்றும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி கொடுத்ததால்தான் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அதேபோல் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு 100% இலவசமாக தடுப்பூசியை வழங்குகிறது என்றும் ஹெச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.







