டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே இன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சீருடையில் வந்த சிலர் மல்யுத்த வீரர்களை தாக்கியதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
देश के खिलाड़ियों के साथ ऐसा बर्ताव बहुत ही शर्मनाक है।
‘बेटी बचाओ' बस ढोंग है! असल में भाजपा भारत की बेटियों पर अत्याचार करने से कभी पीछे नहीं हटी है। pic.twitter.com/TRgPyM8UbF
— Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2023
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“நம் நாட்டு வீரர்களிடம் இதுபோன்ற நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது. ‘பெண்களை காப்போம்’ என்று பாஜக கூறுவது வெற்று கோஷம்! உண்மையில், இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக ஒருபோதும் வெட்கப்படுவது இல்லை”.
இவ்வாறு ராகுல் காந்தி தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார்.







