ஒரு குழந்தைக்கு பெற்றோரை விட சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது. அதே சமயம் அக்குழந்தையின் கைகளை அதன் பெற்றோர் விடாது கெட்டியாய் பிடித்துக் கொண்டால்.. அந்த பிடி இருகி அக்குழந்தையையே காயப்படுத்தினால்… அந்த காயம் தந்த வலியே அவர்களின் பிடியை உதறி தூரம் செல்ல வைத்தால்.. இப்படி எத்தனையோ சாத்தியக்கூறுகள் உண்டு ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவில்!
சமீபத்தில் வெளியான பகாசூரன் திரைப்படம், பிள்ளைகளை அதுவும் குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றோரது கைகளின் பிடியிலேயே வைத்திருக்க சொல்லி இருக்கிறது. அதற்கு காரணம் கைப்பேசியும் அதிலிருக்க கூடிய தவறான செயலிகளும் என விளக்கவும் செய்திருக்கிறது. பெண்களுக்கு மீண்டும் மீண்டும் பாடம் புகட்டும் இந்த திரைப்படம் உயிரை விட மானம் முக்கியம் என்பது போன்ற பிற்போக்கு கருத்துகளையும் முன்வைக்கிறது.

இத்திரைப்படம் பேசும் சில பிரச்னைகள் உண்மைத் தன்மை கொண்டவை தான்! நாம் பலசமயம் செய்தித்தாள்களில் வாசித்தவை.. சிலசமயம் சுற்றி இருக்கும் உறவுகளுக்கு நடந்தவை.. அத்தனையும் உள்வாங்கிக்கொண்டு அன்றாட வாழ்வை வாழும் சாமானிய மக்களுக்கு இந்த படம் தீர்வு அளித்ததா? இல்லை அவர்கள் பயத்தை பத்து மடங்காக்கி பதற்றப்பட வைக்கிறதா?
பெண் பிள்ளைகளை இத்தனை பத்திரப்படுத்த நினைக்கும் இந்த சமூகம் ஆண் பிள்ளைகளின் செயல்களை என்றேனும் கண்காணித்தது உண்டா? இன்றைய சூழலில் பெண்களை கூர்ந்து கண்காணிக்க சொல்லும் இந்த மனநிலை நம்மை முன்னோக்கி கூட்டி செல்லுமா இல்லை பின்னோக்கி அழுத்தி விடுமா என்னும் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண முயல்வோம்.
இந்த பகாசூரன் தெரிவிக்கும் கருத்துகள் குறித்து ஊடகவியலாளர் டி.வி. சோமு அவர்களை தொடர்பு கொண்டபோது, “படத்தில், கவர்ச்சி நடனம் உள்ளிட்ட சில விசயங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ‘பெண்கள் படிக்கவோ வேலைக்கோ செல்லக்கூடாது; காதலிக்கக்கூடாது’ என படம் சொல்வதாக சிலர் கூறுவது போன்ற காட்சிகளே படத்தில் இல்லை. பெண்கள் தங்கள் படங்களை செல்போன் டி.பி.யில் வைக்கக்கூடாது என படம் சொல்வதாக சிலர் விமர்சித்தனர். ஒரு விவாதத்தில் நானும், இதற்கு கண்டனம் தெரிவித்தேன். ஆனால் படத்தில் அப்படியோர் காட்சியே இல்லை. படம் பார்த்த நானே, ஏமாறும் அளவுக்கு எதிர்ப் பிரச்சாரம் நடக்கிறது. மோகன் ஜியின் ‘திரவுபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகியவற்றின் மீதான எனது எதிர் விமர்சனத்தை பதிவு செய்தேன். ஆனால் அந்த இரு படங்களினால் மோகன் ஜி மீது கொண்ட கருத்து வேறுபாட்டை ‘பகாசுரன்’ படம் மீது வன்மமாக வெளிப்படுத்துகிறார்கள். அது தவறு” என தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த படம் பெண்களுக்கான படமா? என்னும் கேள்விக்கு, தி நியூ இந்தியன் எக்ஷ்பிரஸின் நிர்வாக ஆசிரியர் (பொழுதுபோக்கு) சுதிர் சீனிவாசன் கூறியதாவது, “இந்த படம் பேசக்கூடிய பிரச்னைகளை விட, அதற்கான தீர்வாக படம் முன்வைக்கும் கருத்துகளில் தான் பல முக்கிய பிரச்னைகளை உணர முடிகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமான கருத்துகளை முன்வைப்பதற்கு பதிலாக இளம் பெண்கள் வழி தவறிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை வீட்டிற்குள் பொத்தி வைத்து கொள்ளுங்கள் என்பது போன்ற தவறான கருத்துகளையே படம் சொல்கிறது. சிறு குழந்தைகள், பதின்ம பருவ பிள்ளைகள் கைபேசியால் சந்திக்கும் உளவியலை பற்றி ஆரம்பத்திலிருந்தே பேசாத இந்த படம், இறுதிக் காட்சியில் மட்டும் சிறுவர்கள் கைபேசி பயன்படுத்துவது பற்றி கருத்து சொல்வதை ஒரு பூசி மொழுகலாகத்தான் பார்க்க முடிகிறது. பெற்றோரின் வளர்ப்பில் இருக்கும் பிழைகளை இப்படம் சுட்டிக்காட்டவில்லை. உண்மையில் ‘மானம் இழப்பது’ என்றால் என்ன? அதற்கான அர்த்தத்தை நிர்ணயித்தது யார்? என்பது போன்ற கேள்விகளையே நான் முக்கியமானதாக கருதுகிறேன்” என தன் கருத்துகளை பதிவு செய்தார்.
பெற்றோர் பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா? என்னும் கேள்விக்கு, உளவியல் நிபுணர் டாக்டர் சித்ரா அரவிந்த் கூறியதாவது, “இந்த படம் ‘பெண் பாதுகாப்பு’ எனும் ஒரு நல்ல சமூக பார்வையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் சமூக அக்கறை சரியானதே தவிற அதற்காக இவர்கள் சொல்லுகிற தீர்வில் பெண்களுக்கு பாதுகாப்பு வருமா? என்பதெல்லாம் நிச்சயம் கேள்விக்குறி தான். ஒரு உளவியல் ஆலோசகராக என்னுடைய அனுபவத்தின் படி, இது போன்ற அதீத பதற்றம் மற்றும் பாதுகாப்பு உணர்வு கொண்ட பெற்றோர்களாலேயே பிள்ளைகள் தடம் மாறி போவது உண்டு. பெற்றோர் ஒரு பெண் பிள்ளையை அடக்கி வளர்க்காமல் எதிர்வரும் சூழலை கையாளக் கற்றுத் தர வேண்டியது அவசியம். அதுவும் வேகமாக மாறி வரும் தற்போதைய உலக சூழலில் பெண்களை பழைய காலம் போல அடக்கி வளர்ப்பது சாத்தியப்படாத ஒன்றாகவே நான் கருதுகிறேன். மக்கள் மனதில் ஆண், பெண் என்னும் வேறுபாடு ஆழமாக இருக்கும் வரை இது போன்ற பிரச்னைகளும் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த திரைப்படத்தில், பிரச்னைகளின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டியவர்கள பேச வேண்டிய மற்ற விசயங்களை
விட்டுவிட்டதாகவே கருதுகிறேன். இதில் உள்ள சமூக அக்கறையை புரிந்து கொண்டு திரைப்படங்கள் சரியான முறையில் எடுக்க வேண்டும்” என தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பகுத்தறிவு, பழக்கவழக்கம், ஆண்-பெண் வேறுபாடுகளை ஒரு குழந்தை தன் பெற்றோரின் வளர்ப்பில் தான் முதன்முதலில் காண்கிறது. இந்த சமூகத்தில் ‘எது சரி? எது தவறு?’ எனும் குழப்பத்தின் நடுவே திணறும் குழந்தையின் தோளைத் தட்டிக்கொடுத்து வழிகாட்டாமல், முதுகுக்கு பின் நின்று அதன் செயல்களை தீவிரமாக கண்காணித்து இருக்கியபடியே இருப்பது சரியான தீர்வாக இருப்பது கேள்விக்குறியே! குழந்தைகளை அரவணைக்க வேண்டிய கைகள், அவர்களின் கழுத்தை நெறித்து விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்!
- பொன்னி புவியரசி










