முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா Instagram News

ரஜினியின் “டெட்லி காம்பினேஷன்” – அனுபவ அறிவுரையை கூட விமர்சிப்பது சரியா?


ஜெயகார்த்தி

கட்டுரையாளர்

நடிகர் ரஜினிகாந்த் தம்முடைய உணவுப் பழக்க வழக்கம் தொடர்பாக அண்மையில் வெளிப்படையாக பேசியது ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நான்வெஜ் அதாவது அசைவ உணவு சாப்பிடுவதே பாவம் என்பது போல ரஜினிகாந்த் பேசியதாகவும், எப்படி அவர் அப்படி பேசலாம்? இது சரியா? என்று சமூக ஊடகங்களில் தங்கள் இஷ்டம் போல் ரஜினி வெறுப்பாளர்களும், வேறு சிலரும் கருத்துக்களை அள்ளி வீசினர். அவர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதா? எல்லா கருத்தையும் ஆதரிக்கும் ரசிக மனோபாவம் சரியா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.   If you see vegetarians, you will know sin; Rajinikanth shares old memories

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதை அவருடைய சொற்கூற்றிலேயே சொன்னோம் என்றால் “இப்போ நான் 73 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய மனைவி லதா தான் . நான் கண்டக்டர் ஆக இருக்கும்போதே, நான் சில கெட்ட சினேகிதர்கள் சகவாசத்தால, பலதரப்பட்ட கெட்ட பழக்க வழக்கங்களை (ஹாபிட்) எல்லாம் வச்சிக்கிட்டு, கண்டக்டராக இருக்கும் போதே நான் ரெண்டு வேளையும் நான்-வெஜிடேரியன் தான் சாப்பிடுவேன். மட்டன் தான் வேணும். டெய்லி தண்ணி போடுறது, சிகரெட் எத்தனை பாக்கெட்டுன்னு தெரியாது. கண்டக்டராக இருக்கும் போதே அப்படி. இன்னும் பணம், பேர், புகழ் வந்த போது எப்படி இருந்திருப்பேன் என்று நினைத்து பாருங்க. காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 தான். வெஜிடேரியன்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமாக இருக்கும். ( சிரிப்பு) என்னடா இது, ஆடு மாடு மேய்றதை எப்படி சாப்பிடுகிறார்கள் என்று. (சிரிப்பு) இந்த ட்ரிங்க்ஸ்( மது பழக்கம் ), சிகரெட், நான்- வெஜிடேரியன் இது மூணும் டெட்லி காம்பினேஷன். டெட்லி காம்பினேஷன்” என்றார். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், “இது அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருடங்கள் இப்படி சாப்பிட்டவர்கள் யாருமே எனக்கு தெரிந்து 60 வயதுக்கு ஆதிக்கமா இருந்தது கிடையாது. அதுக்குள்ளேயே போயிடுவாங்க. 60 வயதுக்கு மேல் வாழறாங்கன்னா பெட்ல படுத்துட்டு தான் இருப்பாங்க. நலமாக இருக்க முடியாது. இதுக்கு நிறைய பேர உதாரணமாக சொல்லலாம். நான் என்னுடைய வாயால சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி இருந்த என்னை அன்பாலயே மாற்றி மாத்தினவங்க தான் இவங்க. இந்த மாதிரி ஹேபிட்சை யாரும் சொன்னா கூட நிறுத்த முடியாது. விட முடியாது. ஆனால் அன்பா சொல்லி, என்ன மாத்தி கரெக்டான மருத்துவர்கள் அறிமுகப்படுத்தி, அவங்கள சொல்லவச்சு,ஒரு டிசிப்ளினா என்ன சேஞ்ச் பண்ணது லதா அவர்கள் தான். நீங்க படத்துல பார்த்தாலே தெரியும். மேரேஜ்க்கு முன்னால எப்படி இருந்தேன். மேரேஜ்க்கு பின்னால எப்படி இருந்தேன்னு. அதுக்காக நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடுகிறார்.

வீடியோ செய்தி –  ரஜினிகாந்த் சொல்லும் “டெட்லி காம்பினேஷன் இதுதான்”

உடல் நலம் குறித்த தனது வாழ்க்கை பாடத்தை மக்களுக்கு அனுபவபூர்வமாக மது, புகைப்பழக்கம், அசைவ உணவுகளின் கூட்டால் நேரிடும்  ஆபத்துகளை சொல்லி விளக்கி கூறுகிறார் ரஜினிகாந்த். அத்தோடு அதன் தீமைகள் குறித்தும் அப்படி வாழ்ந்தவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததில்லை என்றும் தம்மை நெறிப்படுத்தியவர் தமது உணவு பழக்கத்தை கட்டுப்படுத்தியவர் தமது மனைவி லதா ரஜினிகாந்த் என்றும் அன்பான பாராட்டை அழகாக சொல்லி செல்கிறார் ரஜினிகாந்த். வாழ்க்கையில் திருத்தப்பட்ட எல்லா கணவர்களும் மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தச் சொல்லும் அனுபவ பாடம் தான் இது.

இதை வைத்து விமர்சனம் செய்வோர், ரஜினிகாந்த் சொல்லும் “டெட்லி காம்பினேஷன்” பற்றி பேசாமல் அசைவ உணவு சாப்பிடுவது பாவமா என்றே கேள்வி எழுப்புகிறார்கள். அவர் அப்படி பேசவே இல்லை. ஆகவே அவர்களுடைய விமர்சனத்தை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் உண்மையாகவே ரஜினிகாந்த் என்ன பேசினார் என்பதை கேட்காமலேயே, ரஜினிகாந்த் என்ற பெயருக்காகவே தங்கள் விமர்சனக்கணைகளை வழக்கம் போல் வீசுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் ரஜினிகாந்த் சைவத்திற்கு மாறுங்கள் என்றோ, அசைவத்தை விட்டு விடுங்கள் என்றோ ரஜினி சொல்லவில்லை. அவர் சொல்ல வருவது மது, புகை, அசைவ உணவு என்ற மூன்றும் இணைந்த “டெட்லி காம்பினேஷன்” பற்றி தான். அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதையும் பற்றி தான். அவர் தன்னுடைய வாழ்க்கை பாடத்தை அப்படியே சொல்கிறார்.

அதாவது தாம் இளம் வயதிலேயே புகைப்பழக்கத்தாலும் மது பழக்கத்தாலும் சீர்கேட்டில் இருந்ததாகவும் பின்னர் நடிகராக ஆன பிறகும் அது தொடர்ந்தது என்றும் அதன் பிறகு தமது வாழ்க்கையை உணவு பழக்கத்தை நெறிப்படுத்தியவர் தமது மனைவி லதா ரஜினிகாந்த் என்றுதான் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அவர் சொல்கிறார். இதில் அவர் எந்த உணவையும் குறைத்தும் பேசவில்லை, மிகைப்படுத்தியும் பேசவில்லை. ஒரு நகைச்சுவை போல அவர் ஆடு மாடு சாப்பிடுவததை எல்லாம் இவர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று சைவ உணவு பழக்கத்தை கடை பிடிப்பவர்களையே / சாப்பிடுபவர்களையே அவர் கிண்டல் செய்கிறார். ஆனால் பொங்கி எழுந்தவர்கள் என்னவோ அசைவு உணவு சாப்பிடுபவர்கள் தான். உண்மையில் பொங்கி இருக்க கூடியவர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான்.

எப்போதும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும் ரஜினி?

ரஜினிகாந்த் என்றாலே ஒருவித அச்சத்தில் / பதற்றத்தில் எப்போதும் சிலர் இருப்பதை காண முடிகிறது. அல்லது ரஜினிகாந்த் எதை பேசினாலும் விமர்சிப்பதையே வழக்கமாகக் கொண்டவர்களாக ஒருசிலர் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் எங்கே நின்றாலும், என்ன பேசினாலும் அரசியலாகவும் ஆன்மீகமாகவும் பார்க்கப்படுகிறது.  அவரின் பேச்சை, பேச்சின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்ந்து அதில் எப்படி விமர்சிக்க முடியும் என பார்ப்பதாக கருத முடிகிறது. உண்மையான விமர்சனங்களை யாரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதில் ரஜினிகாந்த்தும் விதிவிலக்கல்ல. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகளை தமிழ்நாட்டில் விமர்சிக்காதவர்களே இல்லை என்றே சொல்லலாம். அப்படி விமர்சனக்கணைகளை கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை எதிர்கொண்டவர் தான் ரஜினிகாந்த் .

10 ஆண்டுகளுக்கு முன்னர், உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு சென்னையிலும் பின்னர் சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்று திரும்பியவர் தான் ரஜினிகாந்த். இப்போது 73 வயதிலும் இளைஞர்களுக்கு போட்டியாக திரையில் தோன்றி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதோடு கோடிகளை குவித்தும் வருகிறார். ஆகையால் அவருக்கு இப்படி இருந்தால் உடலை பேணி பாதுகாத்து நன்றாக துடிப்புடன் வாழ முடியும், நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து குடும்பத்தைக் காக்க முடியும் என்று சொல்வதற்கு தகுதியுடையவர் தானே.

இதுபற்றி எழுத்தாளரும் எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ரஜினி ரசிகருமான ஜெ.ராம்கி அவர்களிடம் கேட்டோம். அதற்கு ” நான்வெஜ் சாப்பிடக்கூடாது என்று ரஜினி ஒருபோதும் சொல்லவில்லை. அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது, அதுவும் மது, புகைப்பழக்கம், நான்வெஜ் இது மூன்றும் டெட்லி காம்பினேஷன் என்று தான் சொல்கிறார். இளம் வயதில் இதில் அதிக ஈடுபாடு இருந்தாலும, பின்னர் அதனை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் தான் சொல்கிறார். இப்போதும் கூட ரஜினி நான்-வெஜ் சாப்பிடுபவர் தான் என்றும், அவர்கள் வீட்டிலும் நான்வெஜ் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினிகாந்த், அனுபவ அறிவுரையாகவே இதனை கூறுகிறார். சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும், நடந்த ரசிகர்கள் சந்திப்பிலும், புகைப்பழக்கம் இருந்தால் குறைத்துக்கொள்ளுங்கள் என்று ரஜினி கூறினார். அவர் சொல்லும் டெட்லி காம்பினேஷன்படி அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்பான அறிவுரைதான் இது. இதில் விவாதம் தேவையில்லை” என்றார் எழுத்தாளர் ஜெ.ராம்கி.

ரஜினிகாந்தின் டெட்லி காம்பினேஷன் பேச்சு குறித்து மூத்த ஊடகவியலாளர் டி.வி. சோமுவிடம் நியூஸ் 7 தமிழ் சார்பில் கருத்தறிந்தோம். அவர் கூறியதாவது, ” ரஜினிகாந்த் எப்போதும் புத்திசாலித்தனமாக தனது அரசியல் கருத்தை புகுத்தக்கூடியவர்.  டெட்லி காம்பினேஷன் என்கிற வார்த்தையை சொல்லும் முன்பு, அசைவத்தை மட்டுமே குறிவைத்து பேசுகிறார். ஈயம் பூசியது மாதிரியும் இருக்க வேண்டும், பூசாதது மாதிரியும் இருக்க வேண்டும் என்று கவுண்டமணி ஒரு படத்தில் பேசியதைப் போல  ரஜினி பேசி இருக்கிறார். ஒரு வாதத்திற்கு ரஜினி சொல்வது சரி என்று ஏற்றாலும், அசைவமின்றி, புகை, மது பயன்படுத்தலாம் என்கிறாரா? இவரது கருத்தை மருத்துவர்கள் ஏற்பார்களா? என்றார். ரஜினிகாந்த் எப்போதும் இந்துத்வா மென்டாலிட்டி உள்ளவர். பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் மாமிசத்தை சாப்பிடக்கூடாது, நிறுத்த வேண்டும் என்பதை எப்படி ஏற்பது. அறிவைத் தீர்மானிப்பதில் சாதி இருக்கிறது என்றவர் ரஜினி.  அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு,தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துவிட்டு, அரசியல் பேசினேன் என்றவர். அவர் பேசியது தமிழக மக்களுக்கு எதிரான ஆன்மிக அரசியலாகத் தான் இருக்கும். ஏனென்றால் அப்படியான சனாதன ‘தர்மத்தை’த்தான் ஆளுநர் பரப்ப நினைக்கிறார். அசைவம் உண்பது இழிவானது என்கிற இந்துத்துவ அரசியலை வெளிப்படுத்தி இருக்கிறார் ரஜினி.  ரஜினியின் பேச்சை அசைவம் ஆபத்து என்று சொல்வதாகவே பார்க்கிறேன். அவருடைய கருத்தை அப்படியே ஏற்க மக்கள் முட்டாள்கள் அல்ல. பகுத்தறிந்து பார்க்கலாம். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது இந்துத்வா ஊதுகுழல் தான். இதனால் தான் அவர் கருத்தை, பேச்சை ஏற்கக்கூடாது” என்கிறோம் என்றார் மூத்த பத்திரிகையாளர் டி.வி. சோமு.

மது – போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வரும் நிலையில், கஞ்சா வேட்டை என்று காவல் துறையே தொடர்ச்சியாக பலமுறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் சூழலில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பேச்சாகவே ரஜினிகாந்தின் உரையை பார்க்கலாம். புகையையும் மதுவையும் நிறுத்த வேண்டும் என்று கூறுவதை அவரது நல்லெண்ண கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். அத்தோடு அவர் வெஜ் மட்டுமே சாப்பிடுங்கள் என்றும் இதை சாப்பிட்டால் நல்லது என்றும் அறிவுரை கூறவில்லை. எதனால் தீங்கு அதிகம் என்றும் எதனால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்; எனவே இதை செய்யாதீர்கள் என்று அனுபவ உரையை தான் சொல்கிறார்.  ரஜினி சொல்லும் ‘டெட்லி காம்பினேஷன்’ ஆபத்தானது என்பதை சாதாரணமாக யோசித்துப் பார்த்தாலே உணர்ந்து கொள்ள முடியும் . பிரபலங்களை அதீதமாக உற்று நோக்குவது என்பது ஊடகங்கள் மட்டுமின்றி சாதாரண மக்களின் வழக்கம் தான் என்றாலும் ரஜினிகாந்த்தின் நல்ல அறிவுரை, அனுபவ உரை பேச்சில்  வீசப்படும்  விமர்சனக் கணைகள் மிகக் கடுமையாகவே இருப்பதை பார்க்க முடிகிறது.

-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram