ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது அவர்களது 3-வது சந்திப்பு ஆகும். அப்போது, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அதனை ஏற்று, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இன்று இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தில் அவருடன் ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தக குழுவினரும் வந்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஜெர்மனி அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த பயணத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சந்தித்து பேசுகிறார். டெல்லியில் இன்று தங்கியிருக்கும் அவர் நாளை, தனது குழுவுடன் பெங்களூரு செல்கிறார்.









